பிக் பாஸ்கட்டில் மளிகை.. நம்பி வீட்டுக்குள்ள விட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..! 6 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யவந்த பிக்பாஸ்கட் நிறுவன ஊழியர் அத்துமீறியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயபால் இவர் ஆன்லைனில் மளிகை பொருட்களை விற்பனை செய்து வரும் டாடா குழுமத்துக்கு சொந்தமான பிக் பாஸ்கட் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
அந்தப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 14 வகையான மளிகை பொருட்களை பிக்பாஸ்கட்டில் ஆர்டர் செய்துள்ளார். இந்த மளிகை பொருட்களுடன் அந்தப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஜெயபால், வீட்டில் அந்தப்பெண் மட்டும் தனியாக இருப்பதை அறிந்து மளிகை பொருட்களை கொடுத்த கையோடு சேட்டையை தொடங்கி அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் டுவிட்டரில் புகார் தெரிவித்திருந்தார்.
வீட்டின் ஹாலில் பொருட்களை வைத்து விட்டு செல்லாமல் சமையல் அறைக்கு சென்று அந்த பெண்ணின் தோளில் கைவைத்து தொல்லை செய்ததாகவும், அவனது தவறான எண்ணத்தை அறிந்து கதவை திறந்து வெளியே ஓடி உதவி கேட்க எண்ணிய போது கதவை தாளிட்ட அவன், அந்த பெண்ணிடம் செல்போன் நம்பரை கேட்டு 20 முறைக்கும் மேலாக நிர்பந்திதாகவும், ஒருவழியாக அவனிடம் இருந்து தப்பி வெளியே வந்த நிலையில், டெலிவரி பாய் தப்பிச்சென்று விட்டதாக புகாரில் தெரிவித்து இருந்தார்.
பிக் பாஸ்கட்டின் வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது அவனது பெயர் ஜெயபால் என்று குறிப்பிட்ட ஊழியர்கள் அவனது செல்போன் எண்ணை தரமறுத்ததால் காவல் நிலையத்தில் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்ததாக கூறி இருந்தார்.
இந்த பதிவுக்கு விளக்கம் அளித்துள்ள பெரு நகர சென்னை காவல்துறையினர் , பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த 6 மணி நேரத்திற்குள் விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட ஒக்கியம் துரைபாக்கத்தை சேர்ந்த ஜெயபாலை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் SOS என்ற காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் , ஏதாவது பிரச்சனை என்றால் அதில் உள்ள சிவப்பு பொத்தானை ஒருமுறை அழுத்தினால் போதும், அடுத்த சில வினாடிகளுக்கு எல்லாம் போலீசார் வீடுதேடி வந்து பாதுகாப்பை உறுதி செய்வர் என்று அறிவுறித்தி உள்ளனர்.
அதே நேரத்தில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள், இதுபோன்று டெலிவரி கொண்டுவரும் ஊழியர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல், வெளியேயே நிறுத்தி பொருட்களை பெற்றுக் கொண்டால் இதுபோன்ற தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதால், இது போன்ற வில்லங்கம் வீடுதேடி செல்வதாக சிலர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
Comments